லிபியாவில் அகதிகள் படகு கவிழ்ந்தது; 90 பேரைக் காணவில்லை???


 
லிபியாவின் மேற்குப் பகுதிக் கரையோரப் பகுதியில், அகதிகள் படகொன்று மூழ்கியதில், 90க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என, கடற்கரையோரப் பாதுகாப்புப் பிரிவுப் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
லிபியத் தலைநகர் திரிபோலிக்கு 41 கிலோமீற்றர்கள் கிழக்காக உள்ள இந்தக் கரையோரப் பகுதியில் இந்த விபத்துச் சம்பவித்துள்ளது. இதில், 29 பேரைக் காப்பாற்ற முடிந்ததாக, கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
குறித்த அந்தப் படகு, இறப்பர் படகு எனத் தெரிவித்த அதிலிருந்து தப்பியோர், அதன் ஒரு பகுதியில் ஓட்டை ஏற்பட்டதன் காரணமாகவே, படகு மூழ்கியதாகத் தெரிவித்தனர். அந்தப் படகில், 126 பேர் பயணித்துக் கொண்டிருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த கரையோரப் பாதுகாப்புப் பிரிவின் பேச்சாளர், "படகின் ஒரு பகுதியில் அதிகமானோர் காணப்பட்டதன் காரணமாக, அப்பகுதியில் ஓட்டை ஏற்பட்டு, நீர் உள்ளே புகுந்துள்ளது. சட்டவிரோதக் குடியேற்றவாசிகளில் 97 பேர், இன்னமும் கண்டுபிடிக்கப்படாதவர்களாவோ அல்லது மூழ்கியவர்களாகவோ காணப்படுகின்றனர்" என்றார்.
மத்தியதரைக் கடலைக் கடந்து, ஐரோப்பாவுக்குள் புக விரும்பும் ஆபிரிக்க அகதிகள், ஐரோப்பாவை நோக்கிப் பயணிப்பதற்கான ஆரம்ப இடமாக, லிபியாவே காணப்படுகிறது. சட்டவிரோதமான படகுகள் மூலம் பயணிக்கும் அவர்கள், அப்படகுகளில் காணப்படும் வசதிக்குறைவு காரணமாகவும் பாதுகாப்புக் குறைவு காரணமாகவும் அதிகமானோர் பயணிக்கின்றமை காரணமாகவும், ஏற்படும் விபத்துகளால் மரணிக்கின்றனர்.
இவ்வாண்டில் மாத்திரம், ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்ற அகதிகளில் 3,740 பேர், கடலில் மூழ்கி மரணித்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இது, 2015ஆம் ஆண்டு முழுவதும் ஏற்பட்ட இவ்வாறான உயிரிழப்புகளின் எண்ணிக்கைக்குச் சமனாகும்.


Popular posts from this blog

இலங்கை உட்பட 4 நாடுகளில் வேற்று கிரகவாசிகள் தொடர்பில் ஆய்வு

எட்டு லட்சம் ரூபா பணத்துடன் சாரதி தலைமறைவு! பொலிஸார் வலைவீச்சு

கொங்கிறீட் தூணின் ஒரு பகுதி உடைந்து தலையில் விழுந்ததில் பொலிஸ் அதிகாரி படுகாயம்!