நிலநடுக்கங்களால் அதிர்ந்தது இத்தாலி!!!
இத்தாலியின் மத்திய பகுதியில், நேற்றுப் புதன்கிழமை ஏற்பட்ட பாரிய அளவிலான இரண்டு நிலநடுக்கங்களால், சிலருக்குக் காயங்கள் ஏற்பட்டதோடு, கட்டடங்கள் பல இடிந்து வீழ்ந்துள்ளன.
இத்தாலி நேரப்படி புதன்கிழமை இரவு 7:10 மணியளவில் (இலங்கை நேரப்படி இரவு 10:40 மணி) 5.5 றிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதோடு, 2 மணித்தியாலங்கள் கழித்து, 6.1 றிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலாவது நடுக்கம், தெற்குப் பகுதிகளிலும் கூட உணரப்பட, இரண்டாவது நடுக்கம், இன்னும் பெரியதாக, தலைநகர் றோமிலும் கூட ஏற்பட்டது.
ஓகஸ்ட் மாதம் 24ஆம் திகதி, இத்தாலியின் அமட்ரீஸ் நகரத்தில் ஏற்பட்ட 6.0-6.2 றிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், 297 பேரின் உயிர்கள் பறிக்கப்பட்டு, பலர் காயமடைந்திருந்தனர். அந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு அண்மையாகவே, புதன்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கங்களும் அமைந்தன.
இந்த நிலநடுக்கத்தின் விளைவாகச் சிலருக்குக் காயங்கள் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், உறுதியான, தெளிவான தகவல்கள் எவையும், உத்தியோகபூர்வமாக இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால், இருளுக்கும் மழைக்கும் மத்தியில், மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் மீட்புப் பணியாளர்கள், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.